< Back
தேசிய செய்திகள்
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தது சரியா?; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி
தேசிய செய்திகள்

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தது சரியா?; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி

தினத்தந்தி
|
20 Aug 2023 12:15 AM IST

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க டி.கே.சிவக்குமார் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பா.ஜனதா பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது சரியா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு:

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க டி.கே.சிவக்குமார் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பா.ஜனதா பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது சரியா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

டி.கே.சிவக்குமார் மீது குற்றச்சாட்டு

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசேகர், சிவராம் ஹெப்பார், கோபாலய்யா, முன்னாள் மந்திரி சோமண்ணா உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சிக்கு இழுக்க துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது குற்றச்சாட்டுகளையும் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பா.ஜனதா செய்தது சரியா?

கர்நாடகம், மராட்டியம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட நாட்டில் பல மாநிலங்களில் பிற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் இழுத்து தங்களது கட்சியில் இணைத்தனர். அது அவர்களுக்கு தவறாக தெரியவில்லை. அந்த மாநிலங்களில் பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுத்தது சரியா?. தற்போது பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக வரும் தகவல்களுக்கு மட்டும் எதிர்ப்பு, சர்ச்சைகளை ஏற்படுத்துவது ஏன்?. ஒருவர் தனது அரசியல் எதிர்காலத்திற்காக எடுக்கும் முடிவை தடுக்க யாராலும் சாத்தியமில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது சரியா?. காங்கிரஸ் அரசுக்கு எதிராக வருகிற 23-ந் தேதி போராட்டம் நடத்துவதாக பா.ஜனதாவினர் அறிவித்துள்ளனர். ஜனநாயக நாட்டில் யார்? என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பா.ஜனதாவினர் எந்த போராட்டம் வேண்டுமானாலும் நடத்தட்டும். முதலில் அவர்களது கட்சியின் தலைவர் யார்? என சொல்லட்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்