இலவச திட்டத்தின் பயன் தேவை இல்லாதவர்கள் அரசுக்கு தெரிவிக்கலாம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
|இலவச திட்டத்தின் பயன் தேவை இல்லாதவர்கள் அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
இலவச திட்டத்தின் பயன் தேவை இல்லாதவர்கள் அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குடும்ப தலைவி
சட்டசபை தேர்தலில் மக்கள் நம்பிக்கை வைத்து காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்துள்ளனர். அதனால் நாங்கள் கொடுத்த 5 வாக்குறுதிகளையும் தற்போது நிறைவேற்றியுள்ளோம். வீடுகளில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குகிறோம். ஒருவர் சராசரியாக மாதம் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவராக இருந்தால், அவர் அதை விட கூடுதலாக 10 சதவீதத்தை இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு மேல் அவர் மின்சாரத்தை பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும். இந்த திட்டத்தின் பயன் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பொருந்தும். குடும்ப தலைவி யார் என்பதை அந்தந்த குடும்பத்தினரே முடிவு செய்து கொள்ளலாம்.
தியாகம் செய்ய விரும்புவோர்...
'சக்தி' திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருகிற 11-ந் தேதி தொடங்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் பிற நிறுவனங்களை சேர்ந்தவர்கள், தங்களுக்கு இந்த இலவச திட்டத்தின் பயன் வேண்டாம் என்று விரும்பினால் அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம். அதற்கு அனுமதி அளிக்கப்படும். திட்டத்தின் பயனை தியாகம் செய்ய விரும்புகிறவர்களை அரசு வரவேற்கிறது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.