கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு
|அதிகாரம் கிடைக்காதவர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு படிப்படியாக பதவி வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
அதிகாரம் கிடைக்காதவர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு படிப்படியாக பதவி வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-
கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கர்நாடகத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். கட்சிக்காக உழைத்தவர்கள் பதவி, அதிகாரம் கிடைக்கவில்லை என்று ஏமாற்றம் அடைய வேண்டாம்.
கட்சிக்காக உழைத்தவர்களுக்கு படிப்படியாக கண்டிப்பாக பதவி, அதிகாரம் கிடைக்கும். நமது அடுத்த குறிக்கோள் நாடாளுமன்ற தேர்தலாகவே இருக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் 135 தொகுதியில் அபார வெற்றி பெற்று விட்டோம் என்று கட்சி தொண்டர்களில் இருந்து தலைவர்கள் வரை அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
மாநகராட்சி தேர்தல்
நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி தொடர வேண்டும். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்று தீர வேண்டும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் கட்சி அலுவலகம் திறந்து தொண்டர்களுடன் இணைந்து தலைவர்கள் பணியாற்ற வேண்டும்.
கட்சி வேலைகளை, கடவுளுக்காக செய்யும் வேலையாக நினைத்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டியது அவசியமாகும். மாநில மக்களுக்கு நியாயமான, நேர்மையான, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி நாம் ஆட்சி நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.