< Back
தேசிய செய்திகள்
டி.கே.சிவக்குமாரின் அரசியல் வாழ்க்கை வரலாறு
தேசிய செய்திகள்

டி.கே.சிவக்குமாரின் அரசியல் வாழ்க்கை வரலாறு

தினத்தந்தி
|
19 May 2023 2:25 AM IST

மாணவர் காங்கிரசில் இருந்து துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உயர்ந்துள்ளார்.

பெங்களூரு:

மாணவர் காங்கிரசில் இருந்து துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உயர்ந்துள்ளார்.

மாணவர் காங்கிரஸ்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி எழுந்த நிலையில் சித்தராமையா புதிய முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் டி.கே.சிவக்குமார் அரசியலில் கடந்து வந்த பாதை, வாழ்க்கை வரலாறு குறித்த விவரங்களை பார்ப்போம்:-

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டஹாலஹள்ளி கிராமத்தில் கெம்பேகவுடா-கவுரம்மா தம்பதிக்கு மூத்த மகனாக கடந்த 1962-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி பிறந்தவர் டி.கே.சிவக்குமார். அவருக்கு 1993-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி பெயர் உஷா. ஆகாஷ் என்ற மகன் உள்ளார். ஐஸ்வர்யா, அபர்ணா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யாவுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் வழி பேரன் தான் அவரது மருமகன். டி.கே.சிவக்குமார் தனது 18-வது வயதிலேயே மாணவர் காங்கிரசில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். மாணவர் காங்கிரசின் மாவட்ட தலைவராகவும் பணியாற்றினார்.

கட்சியில் முக்கியத்துவம்

அவா் பெங்களூருவில் ஆர்.வி.கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அவர் இளைஞர் காங்கிரசில் சேர்ந்து பணியாற்றி அதன் மாநில பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 1985-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் சாத்தனூர் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் தோல்வி அடைந்தாலும் அதிக வாக்குகளை பெற்றதை கண்டு காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்க தொடங்கினர்.

அதன் பிறகு 1987-ம் ஆண்டு பெங்களூரு புறநகர் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர் மீண்டும் சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். ஜனதா தளம் கட்சியின் பலம் வாய்ந்த அந்த தொகுதியில் டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றதால் அனைவரின் கவனமும் அவர் மீது திரும்பியது.

சிறைத்துறை ஒதுக்கீடு

1991-ம் ஆண்டு பங்காரப்பா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டதில் டி.கே.சிவக்குமார் முக்கிய பங்காற்றினார். இதனால் அவரது மந்திரிசபையில் டி.கே.சிவக்குமாருக்கு இடம் அளிக்கப்பட்டு சிறைத்துறை ஒதுக்கப்பட்டது. அப்போது தான் அவர் முதல் முறையாக மந்திரியாக நியமிக்கப்பட்டார். 1994-ம் ஆண்டு சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற போது, அவருக்கு காங்கிரசில் டிக்கெட் மறுக்கப்பட்டது.

இதையடுத்து அவர் சாத்தனூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999-ம் ஆண்டு சாத்தனூர் தொகுதியில் குமாரசாமியை எதிர்த்து டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமைந்த எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் டி.கே.சிவக்குமாருக்கு மந்திரி பதவி வழங்கி முக்கியமான இலாகா ஒதுக்கப்பட்டது.

குதிரை பேரம்

2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாத்தனூர் தொகுதியில் 4-வது முறையாக வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது. தேவேகவுடா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த ஆட்சியில் டி.கே.சிவக்குமாருக்கு மந்திரி பதவி நிராகரிக்கப்பட்டது.

மராட்டிய மாநிலத்தில் விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது, அங்கு குதிரை பேரம் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து மராட்டிய எம்.எல்.ஏ.க்களை கர்நாடகத்திற்கு அழைத்து வந்து பாதுகாக்கும்படி டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி அந்த எம்.எல்.ஏ.க்களை இங்கு அழைத்து வந்து பாதுகாத்தார். இதன் காரணமாக அங்கு மராட்டிய காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழாமல் தப்பியது. இதன் மூலம் காங்கிரஸ் மேலிடத்தில் டி.கே.சிவக்குமார் மீதான மரியாதை அதிகரித்தது.

மின்சாரத்துறை

2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கனகபுரா தொகுதியில் போட்டியிட்டு டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றார். அப்போது சித்தராமையா தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் டி.கே.சிவக்குமாருக்கு மந்திரி பதவி நிராகரிக்கப்பட்டது. 7 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அவருக்கு மின்சாரத்துறையை சித்தராமையா ஒதுக்கினார்.

2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கனகபுரா தொகுதியில் வெற்றி பெற்ற டி.கே.சிவக்குமார், காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் டி.கே.சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றினார். கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் மாநிலங்களவை தேர்தலில் குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு டி.கே.சிவக்குமார் அடைக்கலம் கொடுத்து அவர்களை பாதுகாத்தார்.

பாதயாத்திரை

அதைத்தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தினார். மேகதாது திட்டத்தை அமல்படுத்த கோரி 160 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடத்தினார். உறுதியான, துணிச்சலான நடவடிக்கைகளால் அவரை கனகபுரா பண்டே (பாறை) என்றும் அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்