< Back
தேசிய செய்திகள்
டி.கே.சிவக்குமாரிடம் சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை
தேசிய செய்திகள்

டி.கே.சிவக்குமாரிடம் சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
18 May 2023 2:54 AM IST

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரிடம், சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட நிலை கர்நாடகத்தில் வராது என்றும் அவர் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரிடம், சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட நிலை கர்நாடகத்தில் வராது என்றும் அவர் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தடபுடலாக நடந்த ஏற்பாடு

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மதியம் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் தனித்தனியாக ராகுல்காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, சித்தராமையா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியது. இன்று (வியாழக்கிழமை) முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்க இருப்பதாக கூறி பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் பதவி ஏற்புக்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றிருந்தது.

ராகுல்காந்தி ஒரு மணிநேரம் பேச்சு

பின்னர் சித்தராமையா தான் முதல்-மந்திரி என்று காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும், ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். இதையடுத்து, பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தள்ளி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்திருப்பதும் உறுதியாகி உள்ளது.

ஏனெனில் சித்தராமையாவுடன் வெறும் 20 நிமிடம் மட்டுமே ராகுல்காந்தி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். ஆனால் டி.கே.சிவக்குமாருடன் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ராகுல்காந்தி பேசி இருந்தார். இதன்மூலம் முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் டி.கே.சிவக்குமாரை சமாதானப்படுத்த ராகுல்காந்தி நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் டி.கே.சிவக்குமாரை சிம்லாவில் இருக்கும் சோனியா காந்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி சமாதானப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சோனியா சமாதானப்படுத்தினார்

அதாவது முதல் 2 ஆண்டுகள் சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்கட்டும். அடுத்த 3 ஆண்டுகள் நீங்கள் முதல்-மந்திரியாக இருங்கள். முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் உங்களது கோரிக்கை சரியானதாகவே உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கட்சியின் நலனுக்காக சித்தராமையா 2 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருக்க ஒத்துழைப்பு அளியுங்கள். அதன்பிறகு, காங்கிரஸ் தலைமையே முதல்-மந்திரி பதவியை சித்தராமையாவிடம் இருந்து உங்களுக்கு பெற்றுக் கொடுக்கும்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களில் நடந்த நிலை, கர்நாடகத்தில் நிச்சயமாக வராது. இந்த 2 ஆண்டுகள் துணை முதல்-மந்திரியாக இருங்கள். வேறு யாருக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படாது. உங்களுக்கு தேவையான துறையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். சித்தராமையாவின் கீழ் பணியாற்ற விருப்பம் இல்லையெனில், இன்னும் 2 ஆண்டுகள் மாநில தலைவராக இருந்து கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடுங்கள். உங்கள் மீது நம்பிக்கை உள்ளது என்று டி.கே.சிவக்குமாரிடம் சோனியா காந்தி பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்