காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு
|தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை வீசி எறிந்ததாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
தேர்தல் பிரசாரத்தின்போது பணத்தை வீசி எறிந்ததாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ வைரல்
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைெபற உள்ளது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்டியா மாவட்டம் போவினஹள்ளி பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில் டி.கே.சிவக்குமார் திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களை நோக்கி 500 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
டி.கே.சிவக்குமார் மீது வழக்கு
இந்த நிலையில், டி.கே.சிவக்குமார், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக மண்டியா புறநகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் மக்களை நோக்கி பணத்தை வீசி எறிந்த வீடியோ ஆதாரம் மூலம் தேர்தல் அதிகாரிகள் மண்டியா கோர்ட்டில் புகார் கொடுத்தனர்.
இதனை விசாரித்த கோர்ட்டு, இந்த வழக்கை விசாரிக்க மண்டியா புறநகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவின்பேரில் மண்டியா புறநகர் போலீசார் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.