டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு மேலும் 2 வாரம் தடை நீட்டிப்பு
|டி.கே.சிவக்குமார் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு மேலும் 2 வாரம் தடை நீட்டிப்பு செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறி, சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தன் மீதான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பிப்ரவரி 3-ந் தேதி வரை சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி நடராஜன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், விசாரணையை தொடருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு டி.கே.சிவக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நடராஜன், டி.கே.சிவக்குமார் மீதான சி.பி.ஐ. விசாரணைக்கு மேலும் 2 வாரங்கள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.