< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி; டி.கே.சிவக்குமார் பேட்டி
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி; டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
10 Dec 2022 3:11 AM IST

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்

கோர்ட்டு அனுமதி பெற்று சார்ஜாவுக்கு சென்று வந்துள்ளேன். அங்குள்ள கன்னடர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நாட்டில் நமது கன்னடர்கள் சிறுபான்மையினர். அவர்கள் அங்கு உழைத்து சம்பாதித்து அந்த பணத்தை இங்கு அனுப்புகிறார்கள்.

இங்கு ஆட்சி நடத்துகிறவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அங்கு செல்கிறார்கள். அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவு செய்துள்ளேன். வெளிநாடுகளில் வசிக்கும் கன்னடர்களின் நலனை உறுதி செய்ய தனித்துறை உருவாக்கப்படும். அவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

கர்நாடகத்தின் நலன்

வெளிநாடு வாழ் கன்னடர்களை பாதுகாப்பதில் கர்நாடக பா.ஜனதா அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துவிட்டது. கேரள மாநிலம் இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது. என்னை பா.ஜனதாவை சேர்ந்த எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. நேரில் சந்தித்து பேசினார். காங்கிரசில் நாங்கள் 2 பேரும் இணைந்து பணியாற்றினோம். கர்நாடகத்தின் நலன் குறித்து பேசினோம். அரசியல் பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை.

எச்.விஸ்வநாத் காங்கிரசில் சேருவாரா? என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அரசியல் என்பது, தேங்கிய நீர் அல்ல, அது ஓடிக்கொண்டே இருக்கும் நீர் போன்றது. நாங்கள் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து வருகிறோம். குஜராத்தில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பா.ஜனதாவினர் அங்கு ஆபரேஷன் தாமரை மூலம் எங்கள் கட்சி தலைவர்களை இழுத்து கொண்டனர். அதனால் எங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது.

40 சதவீத கமிஷன்

ஊழலை மக்கள் நீண்ட நாட்களுக்கு சகித்து கொள்ள மாட்டார்கள் என்பதை இமாசல பிரதேச தேர்தல் முடிவு வெளிக்காட்டியுள்ளது. பிரதமர் மோடி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இங்கு வந்து பிரசாரம் செய்யட்டும். தினமும் கூட வரட்டும். கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் அரசு நடக்கிறது. சட்டசபை தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டு 1,350 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. எங்கள் கட்சியில் தலித்துகளும் முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பு உள்ளது. தலித் என்பதால் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கட்சியின் தேசிய தலைவர் பதவி வழங்கப்படவில்லை. அவரது உழைப்பு, தகுதி, திறன் அடிப்படையில் அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்