தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்
|கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் 55 டி.எம்.சி. நீர் தான் உள்ளது என்றும், தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் 55 டி.எம்.சி. நீர் தான் உள்ளது என்றும், தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
55 டி.எம்.சி.
காவிரி பிரச்சினை குறித்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தனி அமர்வு அமைத்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நீரை திறக்க முடியவில்லை. ஆனால் சிறிதளவு நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளோம். இதை பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் விமர்சிக்கின்றன. அவர்களின் ஆட்சி காலத்தில் தண்ணீர் திறந்துவிட்டது குறித்து என்னிடம் தகவல்கள் உள்ளன.
வருகிற 31-ந் தேதி வரை வினாடிக்கு தலா 10 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 124 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் வேண்டும். தற்போது அணைகளில் 55 டி.எம்.சி. நீர் இருப்பு தான் உள்ளது. இதில் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 24 டி.எம்.சி.யும், மைசூரு, ராமநகர், மண்டியாவுக்கு தலா 20 டி.எம்.சி.யும் நீர் வேண்டும். தற்போது கே.ஆர்.எஸ். அணையில் 22 டி.எம்.சி., கபினியில் 6.5 டி.எம்.சி., ஹாரங்கியில் 7 டி.எம்.சி., ஹேமாவதியில் 20 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
கொடுக்க முடியாது
மத்திய அரசின் நீர் ஆணையத்திற்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து இருக்க வேண்டும். குமாரசாமி, கூட்டணியால் தண்ணீரை திறப்பதாக சொல்கிறார். 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் குமாரசாமி, கர்நாடகம்-தமிழ்நாடு சகோதரர்களை போன்ற மாநிலங்கள், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அவர் சொன்னதை நான் பின்பற்றுகிறேன். கர்நாடகத்தின் நலனை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. தமிழகம் தனது நீரை எப்படி பயன்படுத்துகிறது என்பது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அதே நேரத்தில் தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது. கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் 23-ந் தேதி (நாளை) கூட்டப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்-மந்திரிகள், எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களின் ஆலோசனையும் கேட்கிறோம். சட்ட நிபுணர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். இடர்பாடு சூத்திரமும் இருக்கிறது. இதுகுறித்தும் விவாதிக்க வேண்டியுள்ளது.
எங்களின் நோக்கம்
அனைத்துக்கட்சி குழுவை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம். நமது மாநிலத்திற்கு நல்லது நடைபெற வேண்டும். இது தான் எங்களின் நோக்கம். இதில் மேகதாது திட்டம் குறித்தும் விவாதிக்க உள்ளோம். பா.ஜனதா அரசியல் நோக்கத்துடன் மண்டியாவில் போராட்டம் நடத்துகிறது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.