டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதாக கார்கே உறுதி அளித்தார்; டி.கே.சுரேஷ் எம்.பி. பேட்டி
|கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதாக மல்லிகார்ஜுன கார்கே உறுதியளித்தார் என்று டி.கே.சுரேஷ் எம்.பி. கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதாக மல்லிகார்ஜுன கார்கே உறுதியளித்தார் என்று டி.கே.சுரேஷ் எம்.பி. கூறியுள்ளார்.
நெருக்கடியான நேரம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கா்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நெருக்கடியான நேரத்தில் டி.கே.சிவக்குமாருக்கு கட்சியின் மாநில தலைவர் பதவியை சோனியா காந்தி வழங்கினார்.
வாய்ப்பு கிடைக்கும்
அதன் பிறகு எனது சகோதரர் பல்வேறு அவதூறுகள், விமர்சனங்களை எதிர்கொண்டார். கட்சிக்காக பல்வேறு கஷ்டங்களை அவர் அனுபவித்தார். சட்டசபை தேர்தலுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் உங்களுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதனால் டி.கே.சிவக்குமார் பகல்-இரவாக உழைத்து கட்சியை 135 இடங்களில் வெற்றி பெற வைத்துள்ளார். செய்த பணிக்கு பிரதிபலன் கேட்கிறார். சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிச்சயம் வாய்ப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு டி.கே.சுரேஷ் கூறினார்.