< Back
தேசிய செய்திகள்
வார்டு அரசியல்வாதிகளிடம் ரூ.1 கோடி பேரம் பேசிய சிலுமே நிறுவனம்- டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

வார்டு அரசியல்வாதிகளிடம் ரூ.1 கோடி பேரம் பேசிய சிலுமே நிறுவனம்- டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
19 Nov 2022 12:15 AM IST

தேர்தலில் வெற்றி பெற செய்வதாக கூறி பெங்களூருவில் வார்டு அரசியல்வாதிகளிடம் ரூ.1 கோடி வரை பேரம் பேசியதாக சிலுமே நிறுவனம் மீது டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

சதாசிவநகர்:

தேர்தலில் வெற்றி பெற செய்வதாக கூறி பெங்களூருவில் வார்டு அரசியல்வாதிகளிடம் ரூ.1 கோடி வரை பேரம் பேசியதாக சிலுமே நிறுவனம் மீது டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூரு சதாசிவநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முறையிட முடிவு

பெங்களூரு மாநகராட்சி, சிலுமே என்ற நிறுவனத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை வழங்கியது. அந்த நிறுவனம், காங்கிரசுக்கு வரும் ஓட்டுகளை கண்டுபிடித்து அவர்களின் பெயா்களை நீக்கியுள்ளது. கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சிலுமே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக பா.ஜனதா சொல்கிறது. எங்கள் ஆட்சி காலத்தில் ஏதாவது முறைகேடுகள் நடந்திருந்தால், வாக்காளர்களின் பெயர்களை நீக்கி இருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை பெங்களூரு மண்டல வருவாய் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த முறைகேட்டை ஒரு வருவாய் அதிகாரி மூலம் நடத்துவது ஏற்புடையது அல்ல. நாங்கள் நாளை(இன்று) தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து இதுகுறித்து முறையிட முடிவு செய்துள்ளோம்.

ரூ.1 கோடி வரை பேரம்

சிலுமே நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மாநகராட்சி திடீரென வாபஸ் பெற்றுள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தை சேர்ந்த 8 ஆயிரம் பேர் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் தகவல்களை சேகரித்துள்ளனர். மற்றொருபுறம் வாக்காளர்கள் பலர் தங்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக புகார் கூறியுள்ளனர்.

அந்த நிறுவனத்தின் பணி என்ன என்பது குறித்து எங்களிடம் விவரங்கள் உள்ளன. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்தே நாங்கள் விவரங்களை சேகரித்துள்ளோம். அந்த நிறுவனத்தினர் வார்டு அளவில் போய் அரசியல்வாதிகளிடம், உங்களை வெற்றி பெற வைக்கிறோம் என்று கூறி ரூ.1 கோடி வரை பேரம் பேசியுள்ளனர்.

காலி வீடுகள், வீட்டுமனைகளின் பெயரில் பெயர்களை சேர்த்தல் பணியை செய்துள்ளனர்.இந்த விவகாரம் பற்றி ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்