அமைதி பூங்காவான தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா? - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
|அமைதி பூங்காவான தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா என்று சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை இணைக்கவும் ரத்து செய்யவும் கோரி யூடியூபர் மணிஷ் காஷ்யப் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார். இந்த ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மணிஷ் காஷ்யப் சார்பில், நாளேடுகளில் வந்த செய்திகளின் அடிப்படையிலேயே மனுதாரர் இந்த வீடியோக்களை வெளியிட்டதாக வாதிடப்பட்டது. ஆனால் பீகார் அரசின் சார்பில் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே மணிஷ் காஷ்யப்க்கு எதிராக மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டது. தமிழக அரசின் சார்பில் இந்த வழக்குகளை இணைக்க கோரி மனுதாரர் ஐகோர்ட்டை நாட முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மணிஷ் காஷ்யப்பின் மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது. அப்போது மனுதாரருக்கு பல்வேறு கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டு எழுப்பியது. அதில் அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா என்று கேள்வி எழுப்பினர். மேலும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.