விழிஞ்ஞத்தில் பதட்டம் நிலவுவதால் 2 நாட்கள் மதுக்கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவு
|மீனவ கிராம மக்களின் போராட்டம் காரணமாக பதட்டம் நிலவி வருவதால் விழிஞ்ஞம் பகுதியில் இன்றும் , நாளையும் மதுக்கடைகளை மூட மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் விழிஞ்ஞத்தில் சரக்கு முனையம் கட்டுமான திட்டத்தை அதானி குழுமம் செயல்படுத்தி வருகிறது. புதிய திட்டத்தால் குமரியின் மலைகளும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் மண் வளங்களும் அரபி கடலில் மூழ்கடிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக திருவனந்தபுரத்தின் சுற்றுலா தளங்கலான கோவளம், சங்குமுகம் கடற்கரை அழகு கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவ குடும்பங்களை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கோரி அப்பகுதி மீனவ கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து சரக்கு முனைய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மந்திரிகள் தலைமையில் போராட்டக்காரர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் பூரண திருப்தியடையாத நிலையில் மீண்டும் விழிஞ்ஞம் கடலோர பகுதியில் பதட்டமான சூழ்நிலை உறுவாகி உள்ளது.
தூத்துக்குடி சம்பவத்தை போல் மீண்டும் விழிஞ்ஞத்திலும் துயர சம்பவம் நிகழாமல் தடுக்க அரசு மிக எச்சரிக்கையாக அமைதி காத்து வருகிறது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
விழிஞ்ஞம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் அந்த பகுதியில் இன்றும் (ஞாயிறு) நாளை ஆகிய நாட்கள் மதுக்கடைகளை மூட மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.