< Back
தேசிய செய்திகள்
கள்ளக்காதலுக்கு இடையூறு: படுத்த படுக்கையான அண்ணனை கழுத்தை நெரித்துக்கொன்ற சகோதரி
தேசிய செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு: படுத்த படுக்கையான அண்ணனை கழுத்தை நெரித்துக்கொன்ற சகோதரி

தினத்தந்தி
|
9 May 2024 10:11 AM IST

கடந்த 2½ ஆண்டாக சந்தோஷ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் நெடும்பால் அருகே வஞ்சிக்கடவு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 45). இவர் கடந்த 2½ ஆண்டாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்தார். அவரை, அவரது சகோதரி ஷீபா (50) என்பவர் கவனித்து வந்தார். இதற்கிடையே ஷீபாவுக்கும், பொண்ணுக்கரா பகுதியை சேர்ந்த செபாஸ்டின் (49) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.

அவர்கள் சந்தோசுடன் ஒரே வீட்டில் கடந்த 1½ ஆண்டாக வசித்து வந்தனர். இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சந்தோசை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். தொடர்ந்து ஷீபா, செபாஸ்டின் ஆகிய 2 பேரும் கடந்த 5-ந் தேதி சந்தோசை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதி மக்களிடம் நோயால் பாதித்திருந்த சந்தோஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அங்கு வந்த பொதுமக்கள், சந்தோஷின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் புதுக்காடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்த செபாஸ்டின் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை போலீசார் மீட்டு திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஷீபா, செபாஸ்டின் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் சங்கிலியால் கழுத்தை நெரித்து சந்தோசை கொலை செய்ததும், மக்களிடம் இயற்கையாக இறந்து விட்டதாக கூறி நாடகமாடியதும் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்