அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வராது; ஷிண்டே அணி எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
|அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வராது; ஷிண்டே அணி எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
மும்பை,
தற்போது நடந்து வரும் ஆட்சி முடியும் வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வராது என ஷிண்டே அணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்தவர் மகாட் எம்.எல்.ஏ. பாரத் கோகவாலே. இவர் ரத்னகிரியில் கட்சி தொண்டர்களிடம், தற்போது நடந்து வரும் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி முடியும் வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வராது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், " நாம் தான் உண்மையான சிவசேனா. வில், அம்பு நம் உடையது. அதை நாங்கள் உங்களுக்கு செப்டம்பர் 7-ந் தேதி (வழக்கு விசாரணை நடைபெற உள்ள நாள்) காட்டுவோம். அவர்கள் (உத்தவ் தாக்கரேஅணி) நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இந்த அரசு கவிழும் என காத்து இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு இன்னும் 4,5 ஆண்டுகள் (தற்போதைய ஆட்சி காலம் முடியும் வரை) நீடிக்கும். அதற்குள் அடுத்த தேர்தல் வந்து நாங்கள் அனைவரும் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம். " என கூறினார்.
சிவசேனா அதிருப்தி அணி எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு குறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலேவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, " பாரத் கோகவாலே பேசியது குறித்து என்னிடம் எந்த விவரமும் இல்லை. எனினும் சுப்ரிம் கோர்ட்டின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்பதை மட்டும் எங்களால் கூற முடியும். " என்றார்.