முட்டைக்காக கணவருடன் தகராறு: வீட்டின் முதல் தளத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை
|முட்டைக்காக கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் வீட்டின் முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் அனில் குமார் (வயது 35). இவரது மனைவி பூஜா. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்தனர். அந்த தம்பதி பெங்களூரு புறநகர் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். அவர்கள் வாடகை வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அனில்குமார், பூஜா இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிடும்போது அனில் குமார், தனக்கு கூடுதல் முட்டை வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பூஜா மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது பூஜாவை அனில் குமார் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பூஜா, வீட்டின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பூஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முட்டைக்காக ஏற்பட்ட தகராறில் பூஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.