அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாலாசாகேப் தாக்கரேவின் பெயரை பயன்படுத்த கூடாது; உத்தவ் தாக்கரே
|அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு மராட்டிய துணை சபாநாயகர் இன்று தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
புனே,
மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள புளூ ரேடிசன் ஓட்டலில், சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆளும் அரசுக்கு எதிராக மறைமுக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். அவர்களை ஆலோசனை நடத்த மும்பைக்கு வரும்படி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்தும் பலனில்லை. கூட்டணி மீது அதிருப்தி தெரிவித்ததுடன், கூட்டணியை விட்டு வெளியே வரும்படி சிவசேனாவுக்கு ஷிண்டே அழைப்பு விடுத்து உள்ளார்.
கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஷிண்டே, சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அஜய் சவுத்ரியை அந்த பதவியில் அமர்த்தும் முடிவுக்கு துணை சபாநாயகர் ஒப்புதல் வழங்கி உள்ளார். ஷிண்டே, மொத்தமுள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் தனக்கு ஆதரவாக உள்ளனர். தவிர 12 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உடன் உள்ளனர் என கூறியுள்ளார்.
இந்நிலையில், மராட்டியத்தின் பல பகுதிகளில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்கள் மீது சிவசேனா தொண்டர்கள் இன்று தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய உள்துறை இணை மந்திரி மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.வான தீபக் கேசர்கார் கூறும்போது, ஏக்நாத் ஷிண்டே உருவாக்கியுள்ள புதிய குழுவுக்கு சிவசேனா பாலாசாஹேப் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதுபற்றி மராட்டிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அசோக் சவான் கூறும்போது, சபாநாயகரிடம் இருந்து சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறும் வரை இதுபோன்ற குழுக்களை ஏற்று கொள்ள முடியாது என கூறியுள்ளார். மராட்டியத்தில் கார்கர் பகுதியில் உள்ள சிவசேனா அலுவலகத்திற்கு வெளியே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் உருவ பொம்மைகளை எரித்து கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தானே நகரில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறும்போது, சிலர் என்னிடம் வந்து ஏதேனும் கூறுங்கள் என கேட்கின்றனர். ஆனால், நான் முன்பே கூறி விட்டேன். அவர்கள் (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) என்ன விரும்புகிறார்களோ அதனை அவர்கள் செய்யலாம். அவர்களது விவகாரத்தில் நான் தலையிடமாட்டேன். அவர்களது சொந்த முடிவை அவர்களே எடுக்கலாம். ஆனால், பாலாசாகேப் தாக்கரேவின் பெயரை ஒருவரும் பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கவுகாத்தியில் ஷிண்டேவுடன் தங்கியுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மராட்டிய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் அனைவரும் வருகிற 27ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) பதில் அனுப்பும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.