ஆண்டர்சன்பேட்டையில் சாலை விரிவாக்கத்தில் கால்வாய் அமைப்பதில் பாரபட்சம்
|ஆண்டர்சன்பேட்டையில் சாலை விரிவாக்க பணியில் கால்வாய் அமைப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோலார் தங்கவயல்
சாலை விரிவாக்க பணி
கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை சர்க்கிளில் இருந்து ரோட்ஜஸ்கேம்ப் வரை சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிக்காக கடைகள், வீடுகள், கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது.
ஆண்டர்சன்பேட்டையில் உள்ள ஜூம்மா மசூதி, ராமசந்திர மூர்த்தி கோவில், மாரியம்மன் கோவில் ஆகியவையும் இடிக்கப்பட்டுள்ளது. பலரும் தாங்களாகவே முன்வந்து தங்கள் கட்டிடங்களை இடித்துள்ளனர்.
தற்போது சாலை விரிவாக்க பணிகளுக்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேர் கோட்டில் கால்வாய் அமைக்கப்பட்டு வந்த நிலையில், பி.எம். சாலையில் ஒருவர் கடை முன்பு கால்வாய்க்கு வளைவு போன்று அமைத்துள்ளனர். அதாவது அவருக்கு சாதகமாக கடை முன்பு கால்வாய் நேர் கோட்டில் வராமல் வளைவாக அமைக்கப்பட்டு இடம் விட்டுள்ளனர்.
மக்கள் கடும் எதிர்ப்பு
இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை விரிவாக்க பணியில் கால்வாய் அமைக்க பொதுப்பணித்துறையினர் தனிநபருக்கு சாதகமாகவும், பாரபட்சமாகவும் செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
ராபர்ட்சன்பேட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்த தயாளன் கூறுகையில், பொது இடம் என்பது அனைவருக்கும் சமமானது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனிநபருக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
அனைவரும் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடத்தை தனிநபருக்கு சொந்தமாக்கப்படுவதை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றார்.
கண்டிக்கத்தக்கது
சாம்பியன் ரீப் சல்டானா சர்க்கிள் பகுதியை சேர்ந்த வியாபாரி புகழேந்தி கூறுகையில், சாலை விரிவாக்க பணிக்காக எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களின் கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும்.
சாதாரண மக்களுக்கு ஒரு நடவடிக்கை, பெரிய ஆட்களுக்கு ஒரு நடவடிக்கை என அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுகிறார்கள்.
சாலை விரிவாக்கத்துக்காக மசூதி, ராமர் கோவில், அம்மன் கோவிலை அதிகாரிகள் இடித்து தள்ளினார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட நபருக்காக கால்வாய் அமைப்பதில் அதிகாரிகள் தளர்வு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.
சாம்பியன் எம்.பிளாக் பகுதியை சேர்ந்த ஜெகதீஷன் கூறுகையில், சாைல விரிவாக்கத்துக்காக பாகுபாடு பார்க்கக்கூடாது. ஆண்டர்சன்பேட்டையில் மசூதியும், இந்து கோவில்களும் இடித்து அகற்றப்பட்டன.
ஆனால் கால்வாய் அமைப்பதில் தனிநபருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இது நியாயம் இல்லை. இதுகுறித்து எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.