"அரசு கோப்புகளில் மலையாளத்தில் எழுதாவிட்டால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை" - பினராயி விஜயன் எச்சரிக்கை
|அரசு கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதுவது மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மலையாள தினம் மற்றும் அதிகாரப்பூர்வ மொழி வாரம் ஆகியவற்றை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியை முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மலையாள பல்கலைக்கழகம் மற்றும் மலையாள மொழி இயக்கம் தொடர்பான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசு கோப்புகளில் ஆங்கிலத்தில் எழுதுவது மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல் என்று குறிப்பிட்டார். சுயமரியாதையுடன் மலையாளத்தில் கோப்புகளை நிர்வகிக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், விருப்பம் உள்ளவர்கள் அனைவருக்கும் மலையாள மொழியை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், செம்மொழிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள சலுகைகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.