ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 2 நாட்களில் கடன் பெறும் வகையில் நாட்டில் டிஜிட்டல் புரட்சி - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
|ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 2 நாட்களில் கடன் பெறும் வகையில் நாட்டில் டிஜிட்டல் பயன்பாடு உயர்ந்து புரட்சி செய்து வருவதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
'ஜி-20' அமைப்பின் டிஜிட்டல் பொருளாதார செயல் குழு மந்திரிகள் கூட்டம் நேற்று பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய ரெயில்வே துறை, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அதை எதிர்கொள்ள அனைவரும் அவசரமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் தலைமையின் கீழ் 'ஜி-20' கூட்டமைப்பு மூன்று அம்சங்களை தேர்வு செய்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன்மூலம் டிஜிட்டல் பொருளாதாரம் தொழில்நுட்பத்தை ஜனநாயக மயமாக்குவதற்கு உதவியாக இருக்கும். அதில் அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவசரமாக அனைவரும் ஒன்றிணைந்து டிஜிட்டல் பொருளாதாரத்தை பாதுகாப்பது அவசியம்.
மோடியின் பார்வையில்...
ஜி-20 அமைப்பின் டிஜிட்டல் பொருளாதார செயல் குழு விடா முயற்சியுடன் ஒரே தளத்தில், அமர்ந்து சிந்திக்கிறார்கள். இதில் பல்வேறு திசைகளில் உள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து ஆலோசிப்பது சிறப்பு. இந்தியாவின் தலைமையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 3 அம்சங்கள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதார பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் திறன் ஆகியவை ஆகும். இவை மூன்றும் பிரதமர் மோடியின் பார்வையில் உள்ள சிந்தனை ஆகும்.
இவற்றின் மூலம் தொழில்நுட்பத்தை ஜனநாயக மயமாக்கலாம் என்று அவர் நம்புகிறார். தொழில்நுட்பத்தின் பயன் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும். அவர்களது சமூக-பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். தொழில்நுட்பத்தை ஜனநாயக மயமாக்கலில் 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு' குறிப்பிடத்தக்க வகையில் முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிமாற்றம்(யூ.பி.ஐ.) விளங்குகிறது. அது அரசு மற்றும் தனியார் பங்களிப்பால் அமைக்கப்பட்டது ஆகும்.
டிஜிட்டல் மூலம் தீர்வு
இதில் 70 வங்கிகள், 5 கோடி தொழில் நிறுவனங்கள், 33.50 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.10 கோடி அளவில் டிஜிட்டல் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இதன்படி பார்த்தால் ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவில் டிஜிட்டல் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரம், ஆவணங்கள் சரிபார்ப்பு, கல்வி, காப்பீடு இப்படி அனைத்திற்கும் டிஜிட்டல் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 2 நாட்களில் கடன் பெறும் வகையில் டிஜிட்டல் பயன்பாடு உயர்ந்து புரட்சி செய்து வருகிறது. இதன்மூலம் நாட்டில் வளமான மக்கள் பெறும் அனைத்து வசதிகளும், அடித்தட்டு மக்களும் பெற்று வருகிறார்கள்.
விழிப்புணர்வு
டிஜிட்டல் பொருளாதாரம் எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ, அதே அளவிற்கு அச்சுறுத்தல்களும் வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். மேலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.