"தொழில்துறையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்" - ரிசர்வ் வங்கி கவர்னர்
|நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய சாதனையாக இருக்கப் போகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார். டிஜிட்டல் கரன்சி என்பது 'டிஜிட்டல் கோட்' பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை நேற்று(செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. சோதனை அடிப்படையில் இந்த கரன்சி வெளியிடப்பட்டது. இதற்கு டிஜிட்டல் ரூபாய் (மொத்த விலை பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்த டிஜிட்டல் கரன்சி குறித்து இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வருடாந்திர மாநாட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
"மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (CBDC) என்ற பெயரில் ரிசர்வ் வங்கி, பரிசோதனை முறையில் நேற்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நமது நாட்டின் நாணயம் தொடர்பான வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை.
இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் இது மிகப் பெரிய சாதனையாக இருக்கப் போகிறது. தொழில்துறையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
பரிசோதனை முறையில் சில்லறை வர்த்தகத்திற்கான டிஜிட்டல் கரன்சி, இந்த மாதத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும். அதற்கான தேதி தனியாக அறிவிக்கப்படும். அதேநேரத்தில், டிஜிட்டல் கரன்சியை முழு அளவில் பயன்பாட்டுக்கு விடுவது எப்போது என்ற கேள்விக்கு இப்போது பதில் அளிக்க விரும்பவில்லை. ஏனெனில், இதில் இறுதி கெடு எதுவும் நிர்ணயிக்க நான் விரும்பவில்லை."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.