< Back
தேசிய செய்திகள்
ஏரியில் மூழ்கி 4 மாணவர்கள் பரிதாப சாவு
தேசிய செய்திகள்

ஏரியில் மூழ்கி 4 மாணவர்கள் பரிதாப சாவு

தினத்தந்தி
|
29 May 2023 6:45 PM GMT

நந்தி மலைக்கு சுற்றுலா சென்றபோது, ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு:

நந்தி மலைக்கு சுற்றுலா சென்றபோது, ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நந்தி மலைக்கு...

பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் தயேர் (வயது 18). இவர் தனது நண்பர்களான தோகித், சாஹத் மற்றும் பைஜல் ஆகியோருடன் நந்தி மலைக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றார். அப்போது அவர்கள் தேவனஹள்ளி ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்காக சென்றனர். அப்போது அவர்கள் ஏரியில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதற்கிடையே ஏரியின் ஆழமான பகுதிக்கு அவர்கள் சென்றனர். இதனால் நீச்சல் தெரியாத அவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்தனர். காப்பாற்றும் படி அவர்கள் கத்தி கூச்சலிட்டனர். அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள், ஏரியின் அருகே மோட்டார் சைக்கிள்கள் நிற்பதையும், ஆட்கள் இல்லாததையும் கண்டு சந்தேகித்தனர்.

மேலும் 2 உடல்கள்

மேலும் அவர்கள் உடனடியாக விஸ்வநாத்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் பார்வையிட்டனர். இதற்கிடையே தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் யாராவது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதி ஏரியில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்களின் உடல் மீட்கப்பட்டது. அதனை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பிவைத்தனர்.

மேலும் 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் அன்று இரவு வரை தேடியபோதும் அவர்களது உடல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள், ஏரியில் இறங்கி உடல்களை தேடினர். அப்போது மேலும் 2 பேரின் உடல்கள் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

சுற்றுலா வந்த போது பரிதாபம்

அப்போது அவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதும், நந்திமலைக்கு விடுமுறை பொழுதை கழிப்பதற்கு சென்றபோது, ஏரியில் மூழ்கி அவர்கள் உயிரிழந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான 4 பேரும், கல்லூரிகளில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா வந்த இடத்தில் ஏரியில் மூழ்கி 4 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்