கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
|கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
எலெக்ட்ரானிக் சிட்டி:
பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி 2-வது பேஸ் நீலத்திரி பகுதியை சேர்ந்தவர்கள் கிரண் (வயது 13) மற்றும் பைசல். இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் கல்குவாரி குட்டைக்கு குளிப்பதற்கு சென்றனர். அவர்கள் 2 பேருக்கும் நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்கள் குட்டை நீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றனர்.
இதனால் அவர்கள் நீச்சல் தெரியாமல் தத்தளித்தனர். அப்போது அங்கு யாரும் இல்லை என்பதால், சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு வராததால், குடும்பத்தினர் அவர்களை அந்த பகுதியில் தேடிப்பார்த்தனர். இதற்கிடையே குட்டை பகுதியில் அவர்களது உடைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஏரியில் இறங்கி சிறுவர்கள் உடலை தேடினர். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.