நடிகர் லோகிதஷ்வா உடல்நலக்குறைவால் மரணம்
|நடிகர் லோகிதஷ்வா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
பெங்களூரு:
கன்னட திரை உலகில் பழமையான நடிகர்களில் ஒருவர் லோகிதஷ்வா(வயது 80). துமகூரு மாவட்டத்தை சேர்ந்த இவர் பெங்களூரு குமாரசாமி லே-அவுட் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார். இவர் தனது பெரும்பாலான படங்களில் முதல்-மந்திரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமார் உள்பட பலருடன் சேர்ந்து நடித்து இருந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான துமகூரு மாவட்டம் தொண்டகெலே கிராமத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற உள்ளது.