வினாத்தாள் கசிந்தும் நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? - சுப்ரீம் கோர்ட்டு விளக்கம்
|வினாத்தாள் கசிந்தும் நீட் தேர்வை ரத்து செய்யாததற்கான காரணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியானது.
இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வின்போது மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்தது.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக 15க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதேவேளை, நீட் தேர்வில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 6 தேர்வு மையங்களில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை ரத்து செய்தது. அதேவேளை, நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதியானதால் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 23ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாக வெளியிடவும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டது. மேலும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்ததற்கான காரணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக நீட் தேர்வு வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:-
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைக்கும் வகையில் நடைபெறவில்லை. குறிப்பிட்ட தேர்வு மையத்திலேயே வினாத்தாள் கசிந்துள்ளது. ஆகையால், நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய முடியாது.
தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை மத்திய அரசு முன்னாள் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து ஆராய வேண்டும். மேலும், தேர்வு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த குழு தங்கள் ஆலோசனைகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் தேசிய தேர்வு முகமைக்கும் கோர்ட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதன்படி, வினாத்தாள்களை தயாரிப்பது முதல் அதை சரிபார்ப்பது வரை கடுமையான சோதனைகளை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
வினாத்தாள்களை கையாளுதல், சேமித்தல் போன்றவற்றை சரிபார்க்க தற்போது உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.
வினாத்தாள்களை எடுத்து செல்ல "ரியல் டைம் லாக்" கதவு பாதுகாப்புடன் உள்ள வாகனங்களை பயன்படுத்தப்படுவதை பரிசீலிக்க வேண்டும்
வினாத்தாள் கசிவு போன்றவற்றை தடுக்கும் வகையில் 'சைபர் செக்யூரிட்டி' முறைகளில் நவீன தொழில்நுட்பத்துடனான கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தரவுகள் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
வினாத்தாள் கசிவுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் மின்னணு கைரேகைகள், சைபர் பாதுகாப்பு , இணைய பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.