யாரையும் எதிர்ப்பதற்காக நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை - மல்லிகார்ஜுன் கார்கே
|யாரையும் எதிர்ப்பதற்காக நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜக்ஜீவன் ராமுக்குப் பிறகு சுமார் ஐம்பது ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் பதவியை வகிக்கும் முதல் தலித் தலைவர் ஆவார்.
இந்த நிலையில் மல்லிகார்ஜுன் கார்கே, இன்று தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, "யாரையும் எதிர்ப்பதற்காக நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; கட்சியை வலுப்படுத்தவே போட்டியிடுகிறேன்.
நான் வேட்புமனு தாக்கல் செய்த அன்றே, உதய்பூர் காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட "ஒரு தலைவர், ஒரு பதவி" முடிவுக்கு இணங்கி எனது பதவியை ராஜினாமா செய்தேன். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான எனது பிரச்சாரத்தை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறேன்" என்று கூறினார்.
மேலும் பாஜகவை விமர்சித்த கார்கே, "நாட்டில் வேலையின்மை உள்ளது, பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பாஜகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன" என்று கூறினார். கார்கேவுக்காக பிரச்சாரம் செய்வதற்காக கவுரவ் வல்லப், தீபேந்தர் எஸ் ஹூடா, சையத் நசீர் உசேன் ஆகியோர் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.