பெண்ணுடன் வாக்குவாதம் செய்த விவகாரம்: 'நான் என்ன யாரையும் கற்பழித்து விட்டேனா?'- அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. மீண்டும் சர்ச்சை பேச்சு
|பெண்ணுடன் வாக்குவாதம் செய்த விவகாரத்தில் நான் என்ன யாரையும் கற்பழித்து விட்டேனா? என்று அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெண்ணுடன் வாக்குவாதம்
பெங்களூரு மகாதேவபுரா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அரவிந்த் லிம்பாவளி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வா்த்தூர் ஏரி பகுதியில் மழை பாதிப்பு மற்றும் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்றார். அப்போது அவரிடம், புகார் மனு கொடுக்க வந்த மேரி என்ற பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். மேலும் அந்த பெண்ணை அரவிந்த் லிம்பாளி திட்டவும் செய்தார். அத்துடன் பெண் வைத்திருந்த புகார் மனு பேப்பரையும் அரவிந்த் லிம்பாளி பிடுங்கினார்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரவிந்த் லிம்பாவளி மீது அந்த பெண், மாநில மகளிர் ஆணையத்தில் புகாரும் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் பெண்ணுடன் வாக்குவாதம் செய்த அரவிந்த் லிம்பாவளிக்கு, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தார்கள்.
நான் யாரையும் கற்பழித்து விட்டேனா?
இந்த விவகாரம் தொடர்பாக அரவிந்த் லிம்பாவளி தொலைகாட்சி சேனல் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, 'அந்த பெண் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர், ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருந்தார். அதுபற்றி என்னிடம் பேச வந்ததால், கோபம் அடைந்து பேசினேன். நான் என்ன யாைரயும் கற்பழித்து விட்டேனா?' என்று ஆவேசமாக கூறினார்.
பெண்ணுடன் வாக்குவாதம் செய்து சர்ச்சையில் சிக்கிய, அரவிந்த் லிம்பாவளி இந்த விவகாரத்தில் கற்பழிப்பு பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.