பில்கிஸ் பானு வழக்கு: "குற்றவாளிகளை விடுவிக்க பரிந்துரைத்த குழுவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள்"- ப.சிதம்பரம் கேள்வி
|குற்றவாளிகளை விடுவிக்க பரிந்துரைத்தது நடுநிலையான, பாரபட்சமற்ற நிபுணர்கள் குழுவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பில்கிஸ் பானு 21 வயது கர்ப்பிணியாக இருந்தபோது, 11 குற்றவாளிகளால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் 11 பேரின் விடுதலை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "குஜராத்தில் கூட்டு பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற 11 பேருக்கு விடுதலை வழங்கியதில் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.
குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் இரண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் சி.கே. ராவோல்ஜி மற்றும் சுமன் சவுகான் இருந்தனர்.
மற்றொரு உறுப்பினர், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அரசு தரப்பில் முக்கிய சாட்சியாக இருந்த ஸ்ரீ முரளி முல்சந்தனி. குற்றவாளிகளை விடுவிக்க பரிந்துரைத்தது நடுநிலையான, பாரபட்சமற்ற குற்றவியல் நிபுணர்களின் குழுவா?
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.