< Back
தேசிய செய்திகள்
திப்ரூகார் பல்கலைக்கழக ராகிங் விவகாரம்; முக்கிய குற்றவாளி போலீசில் சரண்
தேசிய செய்திகள்

திப்ரூகார் பல்கலைக்கழக ராகிங் விவகாரம்; முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

தினத்தந்தி
|
5 Dec 2022 3:05 PM IST

அசாமில் எம்.காம் மாணவர் விடுதி மாடியில் இருந்து குதித்து, தற்கொலைக்கு முயன்ற ராகிங் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி போலீசில் இன்று சரண் அடைந்துள்ளார்.



திப்ரூகார்,


அசாமில் திப்ரூகார் பல்கலை கழகத்தின் விடுதியில் தங்கி எம்.காம் படித்து வந்த மாணவர் ஆனந்த் சர்மா. கடந்த 27-ந்தேதி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

அவரை அருகே இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் ஆனந்தின் உடல்நிலை தேறியது. இதுபற்றி 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

அவர்களில் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை போலீசார் முதலில், கைது செய்தனர். இதுதவிர, 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

இந்த சம்பவத்தில் 21 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. இந்த சம்பவத்தில், கடந்த செப்டம்பர் முதல் ராகிங் கொடுமை நடந்து வந்துள்ள பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மூத்த மாணவர்களின் தொடர் ராகிங் தொல்லையால், அதுபற்றி பல்கலை கழகத்தின் உயரதிகாரிகளிடம் ஆனந்த் தகவல் தெரிவித்து உள்ளார். பல மூத்த மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கடிதமும் எழுதியுள்ளார்.

எனினும், இதனை மறைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், ராகிங்கை மறைக்கும் செயலில் அதிகாரிகள் ஈடுபட்டார்களா? என்பது பற்றி விசாரிக்கும்படி அசாம் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

ராகிங் போன்ற விசயங்களில் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை அரசு கொண்டுள்ளது என கூறிய அவர், அதிகாரிகளின் பக்கம் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்தும் உள்ளார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில், அரசியல் அறிவியல் படிக்கும் சுப்ரோஜோதி பருவா என்ற மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டார். நீவார் என்ற மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ராகிங் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அசாம் போலீசில் இன்று சரண் அடைந்து உள்ளார். தொடர்ந்து ஒரு வார காலம் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்த ராகுல் சேத்ரி என்ற அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி திப்ரூகார் மாவட்ட எஸ்.பி. ஸ்வேதாங் மிஷ்ரா கூறும்போது, தின்சுகியா மாவட்டத்தில் லேகாபாணி காவல் நிலையத்தில் சேத்ரி சரண் அடைந்துள்ளார்.

ராகிங் விவகாரத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் 3 வார்டன்களை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்