< Back
தேசிய செய்திகள்
இந்தியா பற்றிய கட்டுக்கதைகளுக்கு இந்திய வம்சாவளியினர் பதிலடி கொடுக்க வேண்டும் - துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்
தேசிய செய்திகள்

இந்தியா பற்றிய கட்டுக்கதைகளுக்கு இந்திய வம்சாவளியினர் பதிலடி கொடுக்க வேண்டும் - துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்

தினத்தந்தி
|
6 May 2023 11:52 PM IST

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இந்தியா பற்றிய கட்டுக்கதைகளுக்கு ஒவ்வொரு இந்திய வம்சாவளியும் பதிலடி கொடுக்க வேண்டும் என கூறினார்.

முடிசூட்டு விழாவில் பங்கேற்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடைபெற்ற மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழாவில் இந்தியாவின் சார்பில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முடிசூட்டு விழாவை தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மைனையில் நடைபெற்ற சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலருடன் ஜகதீப் தன்கர் கலந்துரையாடினார்.

அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஆகியோருடனும், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரேசில் அதிபர் இன்சியோ லுலா டா சில்வாவுடனும் ஜகதீப் தன்கர் உரையாடினார். அதனை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி எம்.பி.க்களை சந்தித்து பேசிய ஜகதீப் தன்கர், அவர்களுடன் இருதரப்பு உறவுகளின் பல அம்சங்கள் பற்றி விவாதித்தார்.

இந்திய வம்சாவளியினரை சந்தித்தார்

அதன் பின்னர் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் லண்டனில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம் வந்துவிட்டது, அந்த தருணம் அடிப்படை யதார்த்தத்தால் பிரதிபலிக்கிறது, உலகம் அதை அங்கீகரிக்கிறது.

இந்தியா தனது புலம்பெயர்ந்த மக்களைப் பற்றி பெருமை கொள்கிறது. அவர்கள் தாங்கள் பிறந்த நாட்டிலும், வாழும் நாட்டிலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்.

உங்களில் ஒவ்வொருவரும் தேசத்தின் (இந்தியாவின்) தூதராக இருக்க வேண்டும். தேசத்தின் நற்பெயரை கெடுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத, தவறான மற்றும் ஆதாரமற்ற கட்டுக்கதைகள் பொதுக்களத்தில் முன்னேறாமல் இருப்பதை உறுதி செய்வதோடு, அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜகதீப் தன்கர் பேசினார்.

மேலும் செய்திகள்