< Back
தேசிய செய்திகள்
விதான சவுதாவில் 4-ந் தேதி தர்ணா போராட்டம்
தேசிய செய்திகள்

விதான சவுதாவில் 4-ந் தேதி தர்ணா போராட்டம்

தினத்தந்தி
|
1 July 2023 2:51 AM IST

உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தக் கோரி வருகிற 4-ந் தேதி விதான சவுதா வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு:-

நிர்வாகிகள் ஆலோசனை

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சி தலைவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த தோல்வி குறித்து கட்சி தலைவர்கள் மாவட்டம் வாரியாக கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தை நடத்தி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், கட்சி தோல்விக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர். இது கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

முன்னாள் எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா, பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., முன்னாள் மந்திரி முருகேஷ் நிரானி போன்றவர்கள் தங்களின் அதிருப்தியை பகிரங்கமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு மல்லேசுவரத்தில் நேற்று நடைபெற்றது.

நிபந்தனைகளை விதிக்கிறார்கள்

கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, பொதுச் செயலாளர் என்.ரவிக்குமார், பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்புவது, கட்சிக்கு இக்கட்டு ஏற்படும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கும் நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாத திட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வீடு வீடாக சென்று தங்களின் கையெழுத்திட்ட உத்தரவாத அட்டைகளை வழங்கினர். இதுகுறித்து நாங்கள் இன்றைய (நேற்று) கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தினோம். ஆட்சிக்கு வந்தவுடன் அந்த திட்டங்களுக்கு நிபந்தனைகளை விதிக்கிறார்கள். இதை ஏற்க முடியாது.

கட்டண உயர்வு வாபஸ்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி ஏழை மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி வழங்க வேண்டும். வேலை இல்லாமல் இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். அனைத்து வீடுகளுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.

மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். வருகிற 4-ந் தேதி உத்தரவாத திட்டங்களை அமல்படுத்த கோரி சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். சட்டசபைக்கு உள்ளே எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்துவார்கள். விதான சவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு எனது தலைமையில் ஒரு நாள் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

கருத்து கூறக்கூடாது

கட்சிக்கு இக்கட்டை ஏற்படுத்தும் வகையில் யாரும் பகிரங்கமாக கருத்து கூறக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஏற்கனவே கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீண்டும் அத்தகைய கருத்துக்களை கூறக்கூடாது. வெளியில் பேசும்போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்