திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருப்பு
|திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்தனர்.
திருமலை,
பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டு உள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 1½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாதகங்கையம்மன் கோவில் வரை வரிசையில் காத்திருந்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து நேரடியாக இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரண பக்தர்கள் 24 மணிநேரம் சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர்.
மேலும் நேற்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பவுர்ணமி கருடசேவை நடந்ததால், பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாக காணப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணிவரை 34 ஆயிரத்து 691 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.