< Back
தேசிய செய்திகள்
வெளிமாநிலங்களில் இருந்து குவியும் பக்தர்கள்...திக்குமுக்காடும் அயோத்தி
தேசிய செய்திகள்

வெளிமாநிலங்களில் இருந்து குவியும் பக்தர்கள்...திக்குமுக்காடும் அயோத்தி

தினத்தந்தி
|
23 Jan 2024 1:23 PM IST

அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தி,

அயோத்தி ராமர் கோவிலில் நேற்று பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதமர் நரேந்திர மோடி கருவறையில் பூஜை செய்தார். இந்நிலையில்

கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையைக் காண அயோத்தியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். உள்ளூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் அயோத்திற்கு வருகை தந்து உள்ளனர். அயோத்தி நகரம் முழுவதுமாகவே மனித தலைகளாக காட்சி அளிக்கின்றன. அயோத்தி நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடி வருகின்றது.

அயோத்தியில் ராமர் கோவில் வெளியே ராமர் உருவம் பொறித்த கொடிகளை ஏந்தியும், "ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷமிட்டபடியும் பக்தர்கள் கரகோஷம் எழுப்பி வருகின்றனர்.

எனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் முன்னோர்கள் இதற்காகப் போராடி அது நிறைவேறி உள்ளது. ராமரின் பெயர் பல யுகங்கள் நிலைத்திருக்க வேண்டும் என்று பஞ்சாபைச் சேர்ந்த மனீஷ் வர்மா என்ற பக்தர் கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் என்பவர் 600 கிலோமீட்டர்களுக்கு மேல் சைக்கிள் ஓட்டி அயோத்தி ராமரை தரிசக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் பால ராமரை பார்க்க ஆவலாக உள்ளது. இன்று எனக்கு 'தரிசனம்' செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். என் ஆசை நிறைவேறியவுடன் மீண்டும் பயணத்தைத் தொடங்குவேன். நேற்று கோவிலுக்குச் உள்ளே செல்ல முடியவில்லை என்றாலும், நேற்றைய நாள் அயோத்தியில் இருந்துள்ளேன் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

நான் அயோத்திக்கு சிறப்பு விமானத்தில் மூலம் வந்துள்ளேன். அன்றிலிருந்து நான் இங்கே தங்கி இருக்கிறேன். ராம் லல்லாவை தரிசனம் செய்த பிறகே சொந்த ஊருக்கு திரும்பி செல்வேன் என ராஜஸ்தானின் சிகாரை சேர்ந்த அனுராக் ஷர்மா கூறினார்.

சத்திஷ்கரில் இருந்து அயோதிக்கு பாதயாத்திரையாக வந்த 8 பேர் கொண்ட குழு கூறுகையில்,

சத்தீஷ்கரில் இருந்து அயோத்திக்கு நடந்து வர ராமர் லல்லா எங்களுக்கு பலத்தை கொடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்ள அவர் நம்மைக் கடந்து செல்வார். அதனால் நாம் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறலாம் என்றனர்.

மராட்டியத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணா என்பவர் கூறுகையில்,

ராமர் அழைப்பின் பேரில் நாங்கள் அயோத்திக்கு சில நாட்களுக்கு முன்பு இங்கு வந்தோம். போலீசார் பயணத்திற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதால், ஓட்டல்களில் அறைகள் கிடைக்காது. எங்களை பயணிக்க வேண்டாம் என்று கூறினர். தற்போது நாங்கள் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கிறோம், இந்த நாளுக்காக நாங்கள் காத்திருந்தோம் என்றார்.

அயோத்தி ராமர் கோவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மின்விளக்குகளாலும் ஜொலிக்கின்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். கோவிலுக்கு உள்ளே நுழையும் பக்தர்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்கள் எழுப்பிய படியே வருவதால் பக்தர்களின் கோஷம் கோவிலின் மண்டபங்களில் எதிரொலிக்கின்றது.

மேலும் செய்திகள்