< Back
தேசிய செய்திகள்
திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 5 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 5 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு

தினத்தந்தி
|
19 May 2024 3:00 AM IST

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 30 மணிநேரம் ஆனது.

திருமலை,

கோடையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வார நாளான நேற்று இயல்பை விட பக்தா்கள் கூட்டம் சற்று அதிகமாகக் காணப்பட்டது.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலாதோரணம், புரோகிதர்கள் சங்க கட்டிடம் வரை ரிங்ரோடு தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

திருமலையில் உள்ள நாராயணகிரி பூங்காவில் உள்ள அனைத்துக் கொட்டகைகளிலும் பக்தர்கள் நிரம்பினர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் முன்பு கிருஷ்ணதேஜா விடுதி, கோவிலின் நான்கு மாட வீதிகள், லட்டு பிரசாத கேந்திரம், அன்னப்பிரசாத கட்டிடம், பஸ் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

திருமலையில் பல்வேறு இடங்களில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அலிபிரி டோல்கேட்டில் நீண்ட தூரத்துக்கு பக்தர்களின் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும் அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திருமலையை நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பாபவினாசனம், ஸ்ரீவாரி பாதம் போன்ற பகுதிகளிலும், அலிபிரி சோதனைச் சாவடியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கும், திருமலையில் தரிசன வரிசைகளில் காத்திருந்த பக்தர்களுக்கும் ஸ்ரீவாரி சேவா சங்க ெதாண்டர்கள் பால், மோர், காபி, குடிநீர், அன்னப்பிரசாதம் வழங்கினர்.

ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு ேநற்று 30 மணி நேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் 71 ஆயிரத்து 510 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 43 ஆயிரத்து 199 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 63 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்