< Back
தேசிய செய்திகள்
மகாசிவராத்திரியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
தேசிய செய்திகள்

மகாசிவராத்திரியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

தினத்தந்தி
|
9 March 2024 12:00 AM GMT

மகாசிவராத்திரியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஸ்ரீகாளஹஸ்தி,

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி விழா நடந்தது. அதிகாலை 2.30 மணி முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் சாமி தரிசனத்துக்காக காத்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசன வரிசைகளில் காத்திருந்த பக்தர்களுக்கு நீர்மோர், இளநீர், குடிநீர், பழச்சாறு போன்றவை வழங்கப்பட்டன. தரிசன வரிசைகளில் ஆங்காங்கே மின் விசிறிகளும் பொருத்தப்பட்டு இருந்தன. கோவில் வளாகம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது.

முன்னதாக கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சொர்ணமுகி ஆற்றங்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு பின்டம் வைத்து வழிபாடு நடத்தி, தலைமுடி காணிக்கை செலுத்தி, புனித நீராடி விட்டு சாமி தரிசனம் செய்ய வந்தனர். கோவிலில் பக்தர்களுக்கு மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சொர்ணமுகி ஆற்றங்கரையில் தற்காலிக குளியல் அறைகள், கழிவறைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மேலும் கோவில் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தூர்ஜட்டி கலையரங்கில் 24 மணி நேரமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சிவன் அபிஷேக பிரியர் ஆவார். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வழக்கமாக 4 கால அபிஷேகங்கள் நடப்பது வழக்கம். ஆனால், மகா சிவராத்திரியையொட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணியில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரை 11 கால அபிஷேகங்கள் நடந்தன. இந்த அபிஷேகத்தை பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் அலங்காரமாக கட்டப்பட்டு இருந்த பழங்களை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.

மேலும் செய்திகள்