< Back
தேசிய செய்திகள்
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
தேசிய செய்திகள்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

தினத்தந்தி
|
21 Nov 2022 3:20 AM IST

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை.

அதே சமயத்தில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணியை தொடங்கினார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் 17-ந் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பிறகு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் பக்தர்கள் வெகுநேரமாக காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள்

கொரோன கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் ஆன்லைன், உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மற்ற நாட்களை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக முன்பதிவு விவரம் மூலம் தெரியவந்தது.

கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். கடந்த 4 நாட்களில் மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சென்னை, பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் தமிழக பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

அமைச்சர் தரிசனம்

தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் தரிசனம் செய்தார்.

அய்யப்பனை தரிசனம் செய்ததும் பக்தர்கள் அரவணை, அப்பம் ஆகியவற்றை வாங்கி சென்றனர். இதற்காக 20 லட்சம் டின் அரவணை மற்றும் 15 லட்சம் பாக்கெட் அப்பம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அங்கு தினசரி 3 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 1 லட்சம் லிட்டர் சுக்குநீரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

சீசனை முன்னிட்டு 6 கட்டங்களாக 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்