அயோத்தி ராமர் கோவிலுக்கு 2,400 கிலோ எடை கொண்ட மணியை நன்கொடையாக வழங்கிய பக்தர்கள்
|ஒரே வார்ப்பில் செய்யப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மணியின் ஓசை சுமார் 10 கி.மீ. வரை கேட்கக்கூடியது என்று கூறப்படுகிறது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 பக்தர்கள் இணைந்து, அயோத்தி ராமர் கோவிலுக்கு 2,400 கிலோ எடை கொண்ட கோவில் மணியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஒரே வார்ப்பில் செய்யப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மணியின் ஓசை சுமார் 10 கி.மீ. வரை கேட்கக்கூடியது என்று கூறப்படுகிறது.
இதோடு சேர்த்து தலா 51 கிலோ எடை கொண்ட 7 மணிகளையும் அவர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த மணிகளை அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் பெற்றுக்கொண்டார்.