< Back
தேசிய செய்திகள்
சிக்கமகளூருவில் தேவிரம்மன் கோவில் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
தேசிய செய்திகள்

சிக்கமகளூருவில் தேவிரம்மன் கோவில் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

தினத்தந்தி
|
16 Oct 2022 12:30 AM IST

சிக்கமகளூருவில் தேவிரம்மன் கோவில் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.

சிக்கமகளூரு;


ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் கலெக்டர் ரமேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், கன்னட அமைப்பினரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திவிட்டு மாவட்ட கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கன்னட ராஜ்யோத்சவா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு வரும் நவம்பர் 1-ந் தேதி கன்னட ராஜ்யோத்சவா விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 9 மணிக்கு மாவட்ட சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி பசவராஜ் தேசியக் கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

தேவிரம்மன் கோவில்

பின்னர் அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் கன்னட ராஜ்யோத்சவா விருதை மாவட்டத்தில் திறம்பட செயல்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அன்று மாலை குவெம்பு கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் தயார் செய்யும் படி உத்தரவிட்டுள்ளேன்.

சிக்கமகளூருவில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், மல்லேனஹள்ளியில் பிண்டுகா தேவிரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் முதல் நாளில் பிண்டுகா கிராமத்தில் தேவிரம்மன் கோவிலின் பின்பகுதியில், தேவிரம்மன் மலை உச்சிக்கு பொதுமக்கள் சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதற்காக இந்த ஆண்டும் அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது 2000 அடிக்கு மேல் உயரம் கொண்ட இந்த மலைக்கு நடந்தே சென்று மலை மீது உள்ள தேவிரம்மனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வசதி

இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மலைக்கு செல்பவர்களை கண்காணிப்பதற்கும், மலைக்குச் செல்பவர்கள் பாலிதீன் பைகளை எடுத்து செல்லாமல் பார்த்து கொள்வதற்கும் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும்.

மேலும் சிக்கமகளூருவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காகவும், மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கும் கூடுதல் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வசதி, வாகன நிறுத்தம் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்