ஜனநாயக வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி - பிரதமர் மோடி
|உயிர்த்துடிப்புள்ள ஜனநாயாகம் தான் இந்தியாவின் பெருமை என்று ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,
உயிர்த்துடிப்புள்ள ஜனநாயாகம் தான் இந்தியாவின் பெருமை என்று ஜெர்மனியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசினார்.
ஜெர்மனியின் முனிச் நகரில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: இந்தியர்களாகிய நாம் நமது ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியாதான் என்று நாம் இன்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, ஆடைகள், இசை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள பன்முகத்தன்மைதான் நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி அவசர நிலை.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக மாறியுள்ளது. அனைத்து கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கியுள்ளோம். 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் வங்கி நடைமுறையில் இணைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை தற்போது பெற முடியும்.
கடந்த நூற்றாண்டில் தொழில் புரட்சியால் ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் பலன் அடைந்தன. அப்போது இந்தியா அடிமையாக இருந்தது அதனால்தான் பலன்களைப் பெற முடியவில்லை. ஆனால், தற்போதுள்ள 4- வது தொழில் புரட்சியில் பின்வாங்காமல் உலகையே இந்தியா வழிநடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. டேடா நுகர்வில் இந்தியா இன்று புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மொபைல் இணைய சேவை மிகவும் மலிவான கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது" என்றார்.