கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேவேகவுடா பேச்சு
|நாட்டின் அரசியல் குழப்பமயமாக மாறிவிட்டதாக தேவேகவுடா கூறியுள்ளார்.
பெங்களூரு:-
அடைய வேண்டாம்
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ள நிலையில் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சட்டசபை குழு தலைவர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசியதாவது:-
காலம் கூடி வரும். அப்போது ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமையும். அதனால் நீங்கள் துவண்டுவிட வேண்டாம். கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுங்கள். கட்சியின் தோல்வியால் ஏமாற்றம் அடைய வேண்டாம். உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம். நீங்கள் தைரியத்தை இழந்தால் வெற்றி பெற முடியாது. அதனால் நீங்கள் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
தயங்கவே கூடாது
கட்சியை பாதுகாக்க வேண்டும். இந்த பணியை நாம் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும். நாட்டின் இன்றைய அரசியல் குழப்பமயமாக மாறிவிட்டது. நாம் மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். வாய்ப்பு கிடைத்தபோது மக்களுக்கு ஆதரவாக பணியாற்றியுள்ளோம். மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அதனால் நீங்கள் பத்திரிகைகளை தவறாமல் படிக்க வேண்டும். அதில் வரும் மக்கள் பிரச்சினைகள் குறித்த செய்திகளை முன்வைத்து போராட வேண்டும். நீங்கள் போராட தயங்க வேண்டாம். மக்களுக்கு ஆதரவாக நிற்க நீங்கள் தயங்கவே கூடாது. எனது உடல்நிலை குறித்து யாருக்கும் கவலை வேண்டாம். எனக்கு சிறிது மூட்டு வலி உள்ளது. அதை விட மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து தான் எனக்கு அதிக வேதனை ஏற்படுகிறது.
நமது நிலைப்பாடு
எந்த நேரத்திலும் போராட்டம் நடத்த வேண்டும் என்ற உறுதி என்னிடம் உள்ளது. உங்களுடன் நான் உள்ளேன். பொது சிவில் சட்டம் குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. அந்த சட்டத்தின் வரைவு அறிக்கை முதலில் வரட்டும். அதன் பிறகு அதுகுறித்து ஆலோசனை நடத்தி நமது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்கலாம்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.