< Back
தேசிய செய்திகள்
லட்சத்தீவு பள்ளிகளில் புதிய சீருடை: கலாச்சாரம், வாழ்க்கை முறையை அழிப்பதாக உள்ளது - காங்கிரஸ் கண்டனம்

image courtesy: lakedn.utl.gov.in

தேசிய செய்திகள்

லட்சத்தீவு பள்ளிகளில் புதிய சீருடை: கலாச்சாரம், வாழ்க்கை முறையை அழிப்பதாக உள்ளது - காங்கிரஸ் கண்டனம்

தினத்தந்தி
|
12 Aug 2023 8:36 PM IST

லட்சத்தீவில் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடையை கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

லட்சத்தீவில் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடையை கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் பள்ளிகளில் புதிய சீருடையை அறிமுகப்படுத்தும் லட்சத்தீவு நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு லட்சத்தீவு காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்பியுமான ஹம்துல்லா சயீத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

"முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவில் மாணவிகள் ஹிஜாப் அல்லது தாவணி அணிய தடை விதிப்பது தீவில் வசிப்பவர்களின் உள்ளார்ந்த கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை அழிப்பதாக உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசும், லட்சத்தீவு நிர்வாகமும், தீவுகளின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரான மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்த முயற்சித்து வருகிறது.

புதிய சீருடையை அறிமுகப்படுத்தி கல்வித் துறை சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவை எந்த வகையிலும் ஏற்க முடியாது. லட்சத்தீவின் கலாச்சாரம் மற்றும் தற்போதுள்ள வாழ்க்கை முறையை அழிக்கும் எந்த உத்தரவையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற திணிப்புகள் ஜனநாயக அமைப்பில் தேவையற்ற பதட்டங்களையும் சிக்கல்களையும் உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியான ஜனநாயக போராட்டங்களை நடத்தும். பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து அதற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வார்கள்" என்று கூறினார்.

இதே போல் லட்சத்தீவில் மது விற்பனை மற்றும் நுகர்வை அனுமதிக்கும் மசோதாவுக்கும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. லட்சத்தீவு எம்.பி.யும் என்.சி.பி தலைவருமான முகமது பைசல் மதுபானக் கொள்கை வரைவு மற்றும் புதிய சீருடை முறைக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "புதிய மதுபானக் கொள்கை மற்றும் சீருடைக் குறியீடு ஆகியவை அடிப்படை உரிமை மீறல். நிர்வாகம் தீவுவாசிகளை முன்னெப்போதும் அனுபவித்திராத நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

தீவுவாசிகள் காலங்காலமாக பின்பற்றி வரும் பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கைகள், உணவுப் பழக்கம், உடை அணிதல் போன்றவற்றை வேரறுக்கும் விதத்தில் ஒவ்வொரு சட்டமும் திணிக்கப்படுகிறது. தீவுக்கூட்டத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது முக்கியம். அதைப் பாதுகாக்கும் போராட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்