"கண்டிக்கத்தக்கது, இழிவானது..." ராகுல் காந்தி கருத்துகளுக்கு துணை ஜனாதிபதி கண்டனம்
|அமெரிக்காவில் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகளுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இந்தியா தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல், இந்திய அரசியல்சாசனம், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம், இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நிலை, இந்தியாவில் சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான கருத்துகளை வெளியிட்டார்.
இந்நிலையில் அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "நாம் உண்மையான இந்தியராக இருந்தால், நாட்டின் எதிரிகளுடன் ஒருபோதும் நிற்கமாட்டோம். ஆனால் பதவியில் இருக்கும் சிலருக்கு பாரதத்தைப் பற்றிய எண்ணமே இல்லை என்பது எனக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. அவர்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாது. நமது தேசிய நலனைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது.
இந்தியாவுக்கு வெளியே ஒவ்வொரு இந்தியனும் நாட்டின் தூதராக செயல்பட வேண்டும். ஆனால் அரசியல்சாசன பதவியில் இருக்கும் ஒருவர் இதற்கு நேர்மாறாக இருப்பது எவ்வளவு வலியாக இருக்கிறது? நீங்கள் தேச விரோதிகளாக மாறுவதைப்போல கண்டிக்கத்தக்க, இழிவான மற்றும் சகிக்க முடியாததாக எதுவும் இருக்க முடியாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் புனிதமானது. அதன் நிறுவன தந்தைகளால் 3 வருட கடினமான உழைப்பால் கட்டமைக்கப்பட்டது. இடையூறு, குழப்பம், முழக்கங்கள் மற்றும் சுவரொட்டிகள் எதுவும் எழுப்பாமல் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கூடினர். ஆனால் இப்போது,சிலர் நம் தேசத்தை பிளவுபடுத்த விரும்புகிறார்கள். இது அறியாமையின் உச்சக்கட்டம்" என்று ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.