< Back
தேசிய செய்திகள்
அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை
தேசிய செய்திகள்

அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

தினத்தந்தி
|
13 Aug 2022 6:35 AM IST

அரபி கடலில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணிநேரத்தில் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,



இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், குஜராத்தின் நாலியா நகரில் இருந்து மேற்கு தென்மேற்கே 460 கி.மீ. தொலைவில் அரபி கடலில் வடகிழக்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்.

இதன்பின்னர், இன்று மாலை வடமேற்கு நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலையானது செல்லும். அடுத்த 12 மணிநேரத்தில் தீவிரமடைந்து பின்னர் பலவீனமடையும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதனால் வடமேற்கு மற்றும் அதனையொட்டிய மேற்கு-மத்திய அரபி கடல் பகுதிகள், வங்காள விரிகுடாவின் வடக்கு மற்றும் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதி, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளத்தின் கடலோர பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவித்து உள்ளது.

குஜராத், மராட்டியம் மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளிலும் பலத்த காற்று வீச கூடும். அதனால், கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்