ராமநகரில், சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த 7 பேர் நாடு கடத்தல்
|ராமநகரில், சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த 7 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
ராமநகர்:
வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள்
ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபு நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ராமநகர் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பசபுரா கிராமத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு வங்காளதேசத்தை சேர்ந்த 7 பேர் வேலை செய்வதாகவும், அவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் தொழிற்சாலைக்கு சென்று போலீசார் 7 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை வாங்கி பார்த்த போது அவர்கள் ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று இருந்தது. ஆனாலும் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
நாடு கடத்தல்
அப்போது 7 பேரும் தாங்கள் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதையும், வறுமை காரணமாக அங்கு இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததையும் ஒப்புக்கொண்டனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உதவியுடன் போலி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வாங்கியதையும் அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
இதுகுறித்து பெங்களூருவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் வங்காளதேச நாட்டு தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்கள். அந்த நாட்டு அதிகாரிகள் 7 பேரையும் தங்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி கேட்டு கொண்டனர். இதனால் 7 பேரையும் கொல்கத்தாவுக்கு அழைத்து சென்று எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தோம். அவர்கள் 7 பேரையும் வங்காளதேசத்திற்கு நாடு கடத்தினர். 7 பேருக்கும் போலி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வாங்கி கொடுத்தவர் பற்றி விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.