< Back
தேசிய செய்திகள்
புல்டோசர் விவகாரம்:  இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
தேசிய செய்திகள்

புல்டோசர் விவகாரம்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

தினத்தந்தி
|
1 Oct 2024 3:03 PM IST

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, சட்டம் அனைவருக்கும் சமமானது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

புதுடெல்லி,

பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், உத்தர பிரதேசம். அசாம்.குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் உடனுக்குடன் புல்டோசர்களால் இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள். இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதுதொடர்பான வழக்குகள் குறித்த விசாரணையில் புல்டோசர் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி வீடுகளை இடித்த அசாம் பாஜக அரசுக்கு நேற்றைய தினம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டின் இடைக்காலத் தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில் புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்குகள் மீண்டும் இன்று நீதிபதிகள் பி ஆர். காவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசுகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா. இடிக்கப்படும் வீடுகள் மட்டும் கட்டடங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று வாதிட்டார். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, எங்களது [நீதிபதிகளது] பேச்சு மதம் மற்றும் சமுதாயங்களுக்கு அப்பாற்பட்டது. மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால் சாலைகளிலும். நடைபாதைகளிலும், நீர்நிலைப் பகுதிகளிலும், ரெயில்வே லைன் பகுதிகளிலும் உள்ளவற்றை இடித்து அகற்றலாம் என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம். நடு ரோட்டில் ஒரு மதத் தளம் இருக்குமாயின், அது குருதுவாரா [சீக்கியர்களின் புனித கோவில்] ஆக இருந்தாலும் மசூதியாகி இருந்தாலும், இந்து கோவிலாக இருந்தாலும் அது மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பது கூடாது. சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான், அது மதம் சார்ந்தோ தனிநபர் நம்பிக்கை சார்ந்ததோ இருக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.

மேலும் அனுமதியின்றி புல்டோசர் மூலம் குடியிருப்புகளை இடிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாடு முழுவதும் குடியிருப்புகள் இடிக்கப்படும் விவகாரத்தில் வழிகாட்டுதல்கள் வழங்குவது தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்