"ஜனநாயகம் சுவாசிக்க முடியாமல் திணறி வருகிறது" - ப.சிதம்பரம் விமர்சனம்
|அனைத்து துறைகளும் அடக்கி வைக்கப்பட்டிருப்பதால் ஜனநாயகம் சுவாசிக்க முடியாமல் திணறி வருவதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
ராமர் கோயில் அடிக்கல் தின ஆண்டு விழாவை எதிர்க்கும் நோக்கிலேயே கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்தை ஏற்க முடியாது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அனைத்து எம்.பி.க்களும் இருக்கும் தினத்தை தேர்வு செய்தே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், இதற்கும் ராமர் கோயில் அடிக்கல் தின விழாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், பணவீக்கம் மற்றும் வரி உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்கட்சியினர் தொடர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கூட்டத்தொடர் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்றம் செயலிழந்து விட்டதாகவும், ஏறக்குறைய அனைத்து துறைகளும் அடக்கி வைக்கப்பட்டிருப்பதால் ஜனநாயகம் சுவாசிக்க முடியாமல் திணறி வருவதாகவும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.