பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரி பெங்களூருவில் ஆட்டோ, கார்கள் ஓடாததால் மக்கள் அவதி
|பைக் டாக்சிக்கு தடை விதிக்க கோரி பெங்களூருவில் ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் இயல்புநிலை திரும்பியது.
பெங்களூரு:
தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூருவில் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கின. அதாவது கர்நாடக அரசின் சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வசதியை தனியார் பஸ்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும், ஆட்டோ டிரைவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும், அமைப்புசாரா போக்குவரத்து மேம்பாட்டு வாரியம் உருவாக்க வேண்டும், சர்வதேச விமான நிலையத்தில் இந்திரா உணவகம் திறக்க வேண்டும், மின்சார ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
வாழ்நாள் வரியை தவணை முறையில் பெற வேண்டும், வீட்டு வசதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் பஸ்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், தனியார் பஸ்களை அரசே வாடகைக்கு பெற வேண்டும், ரேபிடோ பைக் டாக்சியை ரத்து செய்ய வேண்டும், ஆட்டோ, வாடகை கார்களுக்கு அரசே செயலியை உருவாக்கி அதன் அடிப்படையில் வாடகை சவாரியை நடத்த வேண்டும் என்பன உள்பட 32 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக தனியார் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால் பெங்களூரு நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சுமார் 2 லட்சம் ஆட்டோக்கள் ஓடவில்லை. 250-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் கலாசிபாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 1½ லட்சத்திற்கும் மேற்பட்ட வாடகை கார்கள், டாக்சிகள் சாலையில் இயங்கவில்லை. தனியார் பள்ளி வாகனங்கள், விமான நிலைய டாக்சி என்று மொத்தம் சுமார் 7 லட்சம் வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இவை அனைத்தும் போக்குவரத்து சேவையில் ஈடுபடாததால், பெங்களூருவுக்கு வந்த மக்களும், வேலைக்கு செல்வோர் என பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்த வெளியூர் பயணிகள் ஆட்டோ, வாடகை கார்கள் கிடைக்காமல் நடுரோட்டில் பரிதவித்தனர். அவர்கள் தங்களுடன் 2, 3 பைகளுடன் வந்தனர். அதை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு பி.எம்.டி.சி. பஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பஸ்களில் தங்களின் இடத்திற்கு சென்றனர். இதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
இதே நிலை கண்டோன்மென்ட் ரெயில் நிலையம், கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி ரெயில் நிலையங்களிலும் காணப்பட்டது. இதன் காரணமாக எப்போதும் ஆட்டோ, வாடகை கார்கள் என பரபரப்பாக காணப்படும் சிட்டி ரெயில் நிலையம் அந்த வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பயணிக்கும் பிரீபெய்டு நிலையம் வாகனங்கள் மற்றும் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தன.
தனியார் பள்ளி வாகனங்கள் சேவையை நிறுத்தியதால், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. இந்த வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகள் குழந்தைகளுக்கு விடுமுறையை அறிவித்து இருந்தன. பள்ளிகளில் நேற்று நடைபெற இருந்த தோ்வு வருகிற 23-ந் தேதிக்கு பள்ளிகள் ஒத்திவைத்தன. ஆஸ்பத்திரிகளுக்கு செல்பவா்கள் ஆட்டோ கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் பஸ்களில் வழக்கத்தை விட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பொதுமக்களின் வசதிக்காக நேற்று பி.எம்.டி.சி. நிர்வாகம் கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கியது. நகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில ஆட்டோக்கள் சாலைகளில் நடமாடின.
இதை கண்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர், அந்த ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி, அதன் டிரைவர்களை எச்சரித்தனர். சில ஆட்டோக்களின் டயரில் இருந்த காற்றை வெளியேற்றி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். சிலர் ஆக்ரோஷம் அடைந்து ஓடிய ஆட்டோக்கள் மீது முட்டைகளை வீசினர். விமான நிலைய சாலையில் சிக்கஜாலா பகுதியில் ஓடிய வாடகை கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ரேபிடோ பைக் டாக்சியை கண்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் அந்த டாக்சிகளை தடுத்து நிறுத்தி அவற்றின் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது முட்டையை வீசி எச்சரித்தனர். இதனால் நகரின் சில பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பஸ்-ஆட்டோ டிரைவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நடராஜ் சார்மா தலைமையில் சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்தினர். பிறகு அங்கு அவர்கள் கூடி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் நள்ளிரவு முதல் பகல் 2 மணி வரை தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே கர்நாடக போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி சுதந்திர பூங்காவுக்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் போக்குவரத்து சங்க தொழிலாளர்களின் மத்தியில் பேசினார்.
அப்போது ரேபிடோ டாக்சிக்கு தடை விதிப்பது, நலவாரியம் அமைப்பது, வீட்டு வசதி திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
இதையடுத்து பகல் 3 மணிக்கு வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக ஆட்டோ டிரைவர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
அதன் பிறகு தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடத்தொடங்கின. இதனால் இயல்புநிலை திரும்பின. அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.