நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க பா.ஜ.க. சதி - மக்களவை காங்கிரஸ் தலைவர்
|நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க பா.ஜ.க. சதி என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசியபோது, அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டி மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஜனநாயக படுகொலை என கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க ஆளுங்கட்சி திட்டமிட்டு பல்வேறு கருவிகளை கையாள்கிறது. எனது இடைநீக்கமும் அதன் ஒரு பகுதியே. இருப்பினும் சபையின் தலைவருக்கு உள்ள மரியாதையின் கீழ், அவரது உத்தரவில் நான் முரண்பட முடியாது.
ஆனால் இதுபோன்ற சூழ்நிலையை கோர்ட்டால் தீர்க்க முடியும் என்று நான் கண்டால், நானும் அதற்கு முயற்சி செய்வேன். இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நான் விரைவில் கோர்ட்டுக்கு செல்லலாம்.
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.