< Back
தேசிய செய்திகள்
டெல்லி:  உகாண்டா இளம்பெண்ணிடம் போதையில் வாலிபர்கள் அத்துமீறல், கொள்ளை
தேசிய செய்திகள்

டெல்லி: உகாண்டா இளம்பெண்ணிடம் போதையில் வாலிபர்கள் அத்துமீறல், கொள்ளை

தினத்தந்தி
|
27 April 2024 9:49 AM IST

டெல்லியில் இளைஞர்கள் 2 பேர் உகாண்டா நாட்டு இளம்பெண்ணை பிடித்து, தாக்கி, ஆடைகளை கிழித்து பர்சை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.

புதுடெல்லி,

டெல்லியின் சத்தார்பூர் நகரில், பூல் மண்டி பகுதியில் இருந்து சத்தார்பூர் பஹாரி பகுதியை நோக்கி உகாண்டா நாட்டை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் இரவில் நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்த இளைஞர்கள் 2 பேர் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த இளம்பெண்ணை தாக்கி, ஆடைகளை கிழித்தெறிந்தனர். பின்னர், அந்த பெண்ணிடம் இருந்த பர்சை பறித்து சென்றனர்.

அதில், ரூ.800 பணம், வெள்ளி ஆகியவை இருந்தன. அந்த இருவரும் தப்பி செல்லும் முன் கல்லால் இளம்பெண்ணின் தலையில் தாக்கி விட்டு ஓடினர். இந்த சம்பவம் பற்றி போலீசில் இளம்பெண் புகாராக அளித்திருக்கிறார்.

இதில், 2 பேரும் 100 அடி சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை திடீரென பின்தொடர்ந்து உள்ளனர். அவர்கள் நாய் ஒன்றையும் வைத்திருந்தனர். நாய்களை கண்டால் அந்த பெண்ணுக்கு பயம். அதனால், அவர்களிடம் இருந்து விலகி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, அந்த இளைஞர்கள் 2 பேரும் இளம்பெண்ணை ஓடி, பிடித்து, சுவருக்கு அந்த பக்கம் இழுத்து சென்றுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில், அவரை அடித்து, தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியுள்ளனர்.

இதுபற்றி மெஹ்ராவ்லி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. கேமிரா உதவியுடன் குற்றவாளிகள் 2 பேரும் கின்னு மற்றும் ரிங்கு காஷ்யப் என அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களை சத்பாரி கிராமத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டபோதும் 2 பேரும் லேசான போதையில் இருந்தனர் என போலீசார் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்