பிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு; மருத்துவமனை வளாகத்திலேயே பிரசவம் - மருத்துவமனைக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ்
|மருத்துவமனையில் அனுமதி மறுக்கக்கப்பட்டதால், மருத்துவமனை வளாகத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.
புதுடெல்லி,
காசியாபாத்தின் கேராவில் வசித்து வரும் 30 வயதான பெண் ஒருவர், திடீர் பிரசவ வலி ஏற்பட்டு அங்குள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் அவரை ஏற்க அனுமதி மறுக்கக்கப்பட்டதால், மருத்துவமனை வளாகத்திலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
எனினும், அந்த பெண்ணின் உறவினர்களால் இதுவரை மருத்துவமனை மீது புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
இருப்பினும், திங்கள்கிழமை அன்று அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்றும், இரவு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே கர்ப்பிணி இருந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், அந்த பெண் தனது குழந்தையை பிரசவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில், பிரசவத்தின்போது கர்ப்பிணிப் பெண்ணை மறைப்பதற்கு செவிலியர்கள் உட்பட சில பெண்கள் சேலையால் மறைத்து பிடித்திருப்பது பதிவாகியுள்ளது. இதன்மூலம், அந்த கர்ப்பிணிக்கு மருத்துவமனையின் உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவருகிறது.
இதனையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையிடம் இச்சம்பவம் குறித்து அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதற்கிடையில், டெல்லி மகளிர் ஆணையம் இந்த பிரச்சினையை தானாக முன்வந்து மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை கோரியுள்ளது. மேலும், அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தலையீட்டிற்குப் பிறகு மருத்துவமனை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.